Twitter

Sunday

வருகை
அவன் காத்திருந்தான். வருகையை எதிர்பார்த்து. இப்போதெல்லாம் அவள் வருவதில்லை. இருப்பினும் அவன் தினமும் காத்திருந்தான். ஒருவேளை அவள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பினால் இருக்கலாம். ஆனால் அதற்கான அறிகுறிகள் சமீபமாக இல்லை. அவனுக்கு என்ன காரணம் என்று புரியவில்லை. தவிர்க்கும் முடிவா இல்லை உறவின் அயர்வா என்று விளங்கவில்லை. எப்போதாவது சந்திக்கும் தருணங்களில் வினவினால் அவள் இதை மறுத்தே வந்திருக்கிறாள். சொல்ல இயலாத சில காரணங்கள் இருக்கலாம். அல்லது சொல்லும் விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். மனித மனங்களை முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் கடினம்தான். எவரின் மன எண்ணங்களையும் சிந்தனை ஓட்டங்களையும் புரிந்துகொள்வது அல்லது புரிய முயற்சி செய்வது இப்போதெல்லாம் எளிதாக இல்லை.

அவன் பழைய நாட்களை நினைத்துப் பார்த்தான். மயிலிறகாய் வருடிய அவளின் வருகைகளை நினைத்தான். அவனுக்கு முன்பே வந்து காத்திருந்தாள் அவள். அவளின் சுமைகளையோ துயரங்களையோ அவள் வெளிப்படுத்தினாளில்லை. அவன் ஏதாவது ஒருவகையில் அவளுக்கு ஆறுதலாய் இருந்திருக்கலாம். இருந்ததாய் நம்பினான். அவனின் அருகாமையை எப்போதும் அவள் விரும்பியதாக என்றோ அவள் சொல்லியிருந்தாள். அவளின் வருகை அவனுக்கும் இதமாயிருந்தது. அவன் நிறைய கவிதைகள் எழுதினான். கவிதைகள் அனைத்திலும் அவள் முகமே கண்டான். பின்னர் ஏனோ தெரியவில்லை. வேலை அதிகமென்று அவளின் வருகை குறைந்து போயிற்று. வேலைச்சுமையும் மன அழுத்தமும் அதிகரிக்க அவளின் வருகை வெகு அபூர்வமானது. ஆயினும் அவன் மயிலிறகாக இருக்கவே நினைத்தான். நேரமின்மை என்பது ஒரு நல்ல காரணமல்ல என்ற சிந்தனை உடையவன் அவன். எவ்வளவு தான் வேலை செய்தாலும், ஒரு சில நிமிடங்கள் பிறருக்கு ஒதுக்குவது என்பது இயலாத செயலா என்று நினைத்திருந்தான். நேரமின்மை என்பது பிடிக்காத செயலைத் தட்டிக் கழிக்கும் முயற்சிக்குத் துணையோ என்றுகூட எண்ணியதுண்டு. ஆயினும் அவன் அவளை நம்பினான். அவளது மன நிலையிலிருந்து அவளை எண்ணிப் பார்த்தான். அவனுக்கு எதுவும் புரியவில்லை. அவள் அவனிடம் நிறைய பொய்கள் கூறியிருக்கிறாள். இப்போதும் பொய்கள் சொல்கிறாள். அழுத குழந்தைச் சமாளிக்கத் தாய் சொல்லும் பொய்கள் போல் சில. அவள் சொல்வது பொய் என்று தெரிந்தும் அவன் இன்னும் அதை மறுக்காமல் நம்புகிறான். அவள் தனதுலகத்தில் தினமும் பயணம் செய்து கொண்டிருந்தாள். எந்த எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களுமின்றி. தனது வெறுமைக்கு ஒரு வடிகால் தேடினான் அவன். தேடிக்கொண்டே இருக்கிறான்.

ஆரம்பத்தில் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. பின்னர் அதுவே கோபமாய் வெளிப்பட்டது. அவன் நிறைய கோபப் பட்டான். அவள் அதற்கெல்லாம் சலனப் படவில்லை. நான் நானாகவே இருக்கிறேன், என்னிடம் மாற்றமில்லை என்றாள். கோபத்தினால் எதையும் மாற்றவும் முடியாது என்று தெளிந்தான். மற்றவர்களின் இயல்பை மாற்ற நினைப்பது நல்ல செயல் அல்ல என்பதையும் அவன் அறிந்திருந்தான். அதிக பட்ச உரிமை கொண்டு கோபித்துக் கொள்வதனால் உறவு சிக்கலாகுமன்றி வேறு பயன் இராது. இப்போதெல்லாம் அவன் கோபப்படுவதில்லை. கவிதைகளும் எழுதுவதில்லை.

அவன் கடந்துசெல்லும் வழியில் தினமும் புதுப்புது மலர்கள் மலர்கின்றன. ஒவ்வொரு மொட்டும் மலரும்போதும் அவன் அவளது வருகையை எதிர்பார்த்தான். சில நாட்களில் பூக்கள் உலர்ந்து காய்ந்து விடுவது போல அவன் எதிர்பார்ப்புகளும் கருகி விடுகின்றன. பூக்கள் இன்னும் பூத்துக் கொண்டுதானிருக்கின்றன. தினமும் அவன் நடந்துகொண்டே இருக்கிறான்.அவனது எண்ணங்களும் அவனுடன் நடக்கின்றன. சில வேளைகளில் முன்னோக்கியும் பல வேளைகளில் பின்னோக்கியும். நடக்கின்ற வேகமும் நினைவுகளின் வேகமும் ஒன்றோடொன்று தொடர்பின்றியே இருக்கின்றன. இரவு பெய்த மழையின் ஈரம் இன்னும் நடைபாதையில் ஒட்டிக்கொண்டுள்ளது. பூமி நனைந்து நுண்துளைகளில் நீர் நிரம்பியதால் வெளிப்பட்ட மண்புழுக்களும், புல்லின் ஊடேயும் புதர்ச்செடிகளின் ஊடேயுமிருந்து வெளிப்பட்ட நத்தைகளும் நடைபாதையெங்கும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை மிதித்து விடாமலிருக்க நினைத்துக் கவனமாய் நடக்கிறான். சைக்கிள்களும் காலடிகளும் மிதித்து நிறைய நத்தைகளும் மண்புழுக்களும் இறந்திருந்தன. ஏன் மிதிக்கப்பட்டோம் என்று அவைகளுக்குப் புரிந்திருக்காது. இறந்துவிட நினைத்து அவை வெளிவந்திருக்காது. பல நேரங்களில் அவனும் அப்படித்தான். ஏனென்று தெரியாமலேயே எவராலோ மிதிக்கப்படுகிறான். உணர்வுகளும் எண்ணங்களும் மிதிபட்டு சில நேரங்களில் இறந்துவிடுகின்றன. பலநேரங்களில் ஊசலாடுகின்றன. அவனுடைய எண்ணங்களை அவன் பலவேளைகளில் சிதைத்துவிட எண்ணுகிறான். முழுமையடையாமலேயே சில உணர்வுகள் அரைகுறையாய்க் கலைகின்றன. நினைவலைகளிலேயே நீந்திக் கொண்டிருக்கையில் நிஜங்களின் வெம்மை அவனைத் தரையினில் தள்ளுகின்றது. நீர் நிறைந்த குளத்துக்குள்ளே அவன் மறைந்திருந்து தன்னை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கையில் நொடிப்பொழுதில் நீரெல்லாம் காய்ந்துபோய் அவனைச் சுழலுக்குள் தள்ளுகின்றது. நிர்வாணமான எண்ணங்களுடன் தனிமையில் அகப்பட்டுக் கொண்டு சில வேளைகளில் தவிக்கின்றான். . ஒற்றை வட்டத்தினுள் மீண்டும் அவளது எண்ணங்களில் மூழ்குகிறான்.

கண்ணுக்குத் தெரியாத சில மெல்லிய இழைகளின் மூலமே உறவுகள் தொடக்கத்தில் கட்டப் படுகின்றன. கண்களுக்குத் தெரியாமலேயே அவ்விழைகள் காலப்போக்கில் அறுபட்டு மறைகின்றன. மறைந்துபோகையில் சில சமயம் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. சில வலிகளை உணர வைக்கின்றன. நாட்கள் நகருகையில் அதிர்வுகளும் வலிகளும் மறைந்துவிடுகின்றன. உறவின் வடுக்கள் மட்டுமே மிஞ்சுகின்றன. ஆயினும் அவனது அதிர்வுகளும் வலிகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற அந்த உறவு காற்றின் உதவியால் கட்டப்பட்டிருக்கலாம். ஒரு வரைமுறைக்குள்ளோ ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளோ அமையாத மென் கயிற்றால் ஆன உறவு. இருக்கிறதா இல்லையா என்று கூட அறிந்திட முடியாதது. அழுத்தும் வெளிப்புறச் சுமைகளோ அழுந்திப்போகச் செய்யும் சுயவருத்தங்களோ இல்லாத உறவு நட்பு. எங்கேயோ தொடங்கி எப்போதோ முடிந்துவிடும் ஒரு குறு நிகழ்வு. அவன் அந்தப் புள்ளி போன்ற உறவைக் கம்பியாய் நீட்டி முடிவிலிதூரம் வரைக் கொண்டு செல்ல நினைத்தான். அவனுக்கு வெற்றிடத்தில் நிரம்பி வழியும் வெறுமையே எஞ்சுகின்றது.

அவனுக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது. ஓடும் நதிக்கருகே துறவி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். தண்ணீரில் தத்தளிக்கும் தேள் ஒன்றினைக் காப்பாற்ற எண்ணி அத்தேளை வெளியிலெடுத்தார். தன்னை யாரோ தாக்க வருகிறார்கள் என்றெண்ணிய தேள் துறவியைக் கடித்து விட்டது. வலி பொறுக்காமல் கையை உதறினார். தேள் மீண்டும் நீருக்குள் விழுந்து தத்தளித்தது. தேளின்மீது கரிசனம் கொண்டவராய் மீண்டும் அத்தேளை வெளியிலெடுத்தார். மீண்டும் தேள் கடித்தது. மீண்டும் துறவி வலி பொறுக்க முடியாமல் உதறினார். மீண்டும் தேள் நீரினுள் தத்தளித்தது. அவ்வழி சென்ற சிலர் துறவியிடம் கேட்டனர் , "உங்கட்கென்ன மனப்பிறழ்வா? தேள்தான் கடித்துக் கொண்டே இருக்கிறதே! பின் ஏன் அதனைக் காப்பாற்ற மீண்டும் மீண்டும் கடிபடுகிறீர்கள்?". துறவி பதில் அளித்தார், " தேள் தன்னுடைய இயல்பிலிருந்து மாறாமல் கடித்துக்கொண்டே இருக்கிறது. நானும் எனது இயல்பு மாறாமல் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறேன். இதில் தவறில்லையே!". துறவியின் மனநிலையில் தானும் இருப்பதாக எண்ணினான். ஆனால் நிச்சயமாக அவன் துறவி இல்லை.

கால வெள்ளம் அவனது நினைவுகளைக் களவாடிச் செல்லலாம். அல்லது ஒரு சிறிய வடிவமிலாத குடுவைக்குள் அவனது உணர்வுகள் சிறைப்படலாம். அவன் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறான், அவள் வருகைக்காக.

No comments:

Post a Comment