Twitter

Thursday

கிளி
ண்ணன் குடும்பம் புதூருக்கு மாற்றலானது முதல் குழந்தைகளின் படிப்பு
சற்றே மந்தமானது. நகரத்தின் கற்பித்தல் முறையிலிருந்து மாறுபட்டிருக்கும்
கிராம நடைமுறைக்கு மாற குழந்தைகள் திணறிப்போயின. போதாக்குறைக்கு அண்ணனும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாய்ச் செல்லம் கொடுத்து கேட்டதெல்லாம் வாங்கிக் கொ(கெ)டுத்துக்கொண்டிருந்தான். கேட்காத பொருள்களையும் வாங்கிக் கொடுத்தான். அப்படி வந்த பொருட்களில் லோகேஷ்-க்கு மீன் தொட்டியும் யாழினிக்கு கிளி ஒன்றும் ரொம்பவும் பிடித்து விட்டன.

ஊருக்கு நான் போன் செய்யும் வேளைகளில் யாழினியுடன் பேசினால், "
சித்தப்பா, எப்போ வறீங்க " என்று கேட்பாள். நான் பதில் சொல்லுமுன், "
சித்தப்பா, இங்க பெட்டி இருக்கா, பெட்டி நல்லா பேசுவா " என்பாள். பெட்டி
(Petty ) என்பது அவள் கிளிக்கு வைத்த பெயர். அந்தக் கிளி சிறு சிறு
வார்த்தைகள் பேசவும் தெரிந்து வைத்திருந்ததது. " யாழினி ரொம்பவும் கிளிப்
பைத்தியமாயிட்டா. எப்போ பாத்தாலும் அவ கிளிய நோண்டிக்கிட்டே இருக்கா.
படிக்கிறதேயில்ல" என அம்மாவும் அடிக்கடி புகார் சொல்லிக் கொண்டிருந்தார்.

அது உண்மைதான் என்பது நான் ஊர் சென்றதும் விளங்கியது. யாழினி கிளியுடன் விளையாடிக்கொண்டே இருந்தாள் அல்லது கிளியைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தாள். மாலை பள்ளியிலிருந்து திரும்பியவுடன் உடை கூட
மாற்றிக்கொள்ளாமல் கிளிக்கூண்டிருக்கும் இடம் சென்று நோட்டம் விடுவாள். "
பெட்டி சாப்ட்டாளா?" என்று அவளது அம்மாவிடம் விசாரிப்பாள். தக்காளி
அல்லது தானியம் கொண்டு வந்து கிளிக்குத் தருவாள். ஒரு நீளமான குச்சியில்
கிளியை அமர்த்தி அதனைத் தூக்கிக் கொண்டு வீடு முழுதும் வருவாள். கிளியைத் தரையில் அமர்த்தி " யாழக்கா சொல்லு" என்பாள். பல சமயங்களில் கிளி " கீ" என்றது. சில சமயங்களில் ஏதோ பேச முயற்சித்தது. அவ்வாறு பேச முயற்சிக்கும் சமயங்களில் கிளி "யாழக்கா" எனச் சொல்வதாய் திருப்தி அடைவாள். கிளியே "யாழக்கா" என்று சொல்வது போன்று கிளிக்குரலிலேயே அவளும் சொல்லுவாள். " கீ" எனக் கத்துகையில் " பெட்டி கோபமா இருக்கா. இப்போ பேச மாட்டா" என்று சொல்லி மற்றவர்களைச் சமாதானப் படுத்துவாள்.

சில சமயங்களில் அவளது செய்கைகள் கிளியைத் தொந்தரவு செய்வது போலிருந்தது. கூண்டுக்குள்ளிருக்கும் கிளியைச் சிறு குச்சி வைத்துக் குத்த முயல்வது, கிளியை அடிக்கடி "யாழக்கா" சொல்லச் சொல்வது, கிளியினைத் தரையில் விட்டுப் பின் அதைத் துரத்துவது எனச் சில சேட்டைகள் என்னையும் எரிச்சல் படுத்தின. கிளியும் சில சமயங்களில் அவளுடன் ஒத்துழைத்தது. அண்ணனின் சட்டையைப் பற்றி அவன் மேல் ஏறித் தோளில் அமர்ந்து கொண்டது. வீட்டைச் சுற்றிலும் உலவியது. சிறு செடிகளில் ஏறி அமர்ந்து கொண்டது. கிளி பறந்து சென்று விடாமல் இருக்க அதன் இறக்கைகள் சிலவற்றை வெட்டி விட்டிருந்தான் அண்ணன். எங்காவது தோட்டத்திற்கோ வெளியில் விளையாடவோ சென்றால் அண்ணனும் குழந்தைகளும் கிளியையும் உடன் எடுத்துக்கொண்டு சென்றனர். அதன் கூரிய மூக்கும் பார்வையும் கிளி எப்போதும் கோபமாய் இருப்பது போல் எனக்குத் தோன்றியது. மாலை வேளைகளில் கிளியினை வெளியில் விளையாட விடுவது சற்று ஆபத்தான
செயலாயிருந்தது. தெருவில் உலாவும் சில பூனைகள் கிளியினை விரட்டிச் சென்று கொன்று தின்னும் அபாயமும் இருந்தது.

அண்ணியும் அவள் சரியாகப் படிப்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
கணக்கில் ரொம்பவும் வீக் என்றார். அவள் அனேகமாய் எல்லாக் கணக்குத்
தேர்வுகளிலும் பெயிலாகிக் கொண்டிருந்தாள். அவளுக்குக் கணக்குச் சொல்லிக்
கொடுக்க முயற்சி செய்தேன். அவளது கவனம் முற்றிலுமாய்க் கணக்கில் இல்லை. ஏதேதோ விளையாட்டுக் காட்டினாள். கடைசியில் கிளி பற்றிப் பேச
ஆரம்பித்தாள். அவளது கவனத்தைத் திசை திருப்ப எண்ணி " உன்னை ஒரு அறையில் வைத்து நாள் முழுதும் அடைத்து வைத்தால் இருப்பாயா?" என்று கேட்டேன். " மாட்டேன்" என்றாள். " அப்போ கிளிய மட்டும் அடச்சு வச்சிருக்க?" என்று கேட்டேன். சிரித்தாள். " உன்ன எப்போ பாத்தாலும் குச்சிய வச்சி
நோண்டிக்கிட்டே இருந்தா உனக்கு கோவம் வருமா?" என்றேன். " ஆமா " . " அப்போ கிளிய மட்டும் நீ நோண்டிக்கிட்டே இருக்கிற?" . " கிளியும் நானும் ஒண்ணா?" என்றாள். ம்ஹூம். பலனில்லை. அண்ணனைக் கடிந்துகொண்டேன். எதற்காகக் கிளி வாங்கி வந்துகொடுத்தாயெனக் கேட்டேன். யாழினி படிப்பில் கவனமில்லை என்றேன். அதற்கெல்லாம் அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

பொங்கலுக்கு முதல் நாள் மாலை. மொட்டை மாடியில் அமர்ந்து புத்தகம்
படித்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் வீட்டு வாசலில் பொங்கல் கோலம்
போடுவதில் தீவிரமாயிருந்தார்கள். கிளியைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு
வந்தாள் யாழினி. " மொட்டை மாடிக்கெல்லாம் எடுத்துட்டு வராதே. பருந்து
வந்து தூக்கிட்டுப் போயிடும்" என்றேன். அதையெல்லாம் அவள் கேட்டுக்
கொள்வதேயில்லை. " யாழக்கா, யாழக்கா" என்று கிளியைச் சொல்லச்சொன்னாள். " யாழக்கா, வாழக்கா" என்று கேலி செய்தான் லோகேஷ். சிறிது நேரம் விளையாடிவிட்டுக் கிளியையும் எடுத்துக் கொண்டு கீழே சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் பெரிய கூச்சல். யாழினியின் கத்தல் பலமாயிருந்தது. ஓடிச்சென்று பார்க்கையில் ஒரு பூனை கிளியைக் கவ்விக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. கோலம் போட்டுக்கொண்டிருந்த அனைவரும் பூனையை விரட்டிக்கொண்டு சென்றனர். வீட்டு வேலியைத் தாண்டி ஓடுவதற்குள் பூனையை அனைவரும் நெருங்கி விட கிளியைப் போட்டுவிட்டு பூனை தப்பியோடி விட்டது. பத்து வினாடிகளுக்குள் இவையெல்லாம் நிகழ்ந்துவிட்டன. யாழினி அழுதுகொண்டிருந்தாள். கிளி மிகவும் பயந்து போயிருந்தது. பூனை கடித்துக் கவ்விக்கொண்டு சென்றதால் கிளியின் உடலில் காயம். இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. காயத்தில் எண்ணெய் தடவினார்கள். கிளி நடுங்கிக் கொண்டிருந்தது. வீட்டுக்குள்ளேயே கிளியினை அதன் கூண்டில் வைத்துக்கொண்டு அன்றிரவு உறங்கினாள் யாழினி.

மறுநாள், பொங்கலன்று கிளி மிகவும் சோர்ந்து போயிருந்தது. அருகில் யாரும்
சென்றால் நடுங்கியது. கூண்டிற்குள் உணவு தந்தால் "கீ" எனப் பயக்குரல்
எழுப்பியது. கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் செல்ல அண்ணனைக் கேட்டேன். அவன் விசாரித்து விட்டு " இன்னிக்கு பொங்கல் லீவு, டாக்டர் இல்ல.
நாளைக்கு எடுத்துட்டுப் போறேன்" என்றான். அடுத்த நாள் கிளியை
எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்றான் அண்ணன். யாழினியும் உடன்
சென்றாள். திரும்பி வந்தவள் " டாக்டர் பெட்டிக்கு ஊசி போட்டார்" என்றாள்.
காயத்தில் மருந்தும் இட்டிருந்தார். மதியவேளைக்கு மேல் கிளி இன்னும்
சோர்ந்து விட்டிருந்தது. தலையைத் தூக்கிக் கொண்டு கண்கள் சொருகி,
பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஏதேனும் சத்தம் கேட்டால் மட்டுமே கண்
விழித்துப்பார்த்தது. இரவில் செத்துப்போய் விட்டது.

யாழினிக்கு அது உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பது புரியவில்லை. கிளி
கூண்டுக்குள் விழுந்து கிடப்பதைப் பார்த்து அழ ஆரம்பித்தாள். அண்ணி
சமாதானப் படுத்தினார், " கிளி தூங்குது , வேற ஒண்ணும் இல்ல" என்றெல்லாம்
சொல்லிப்பார்த்தார். யாழினி சமாதானமாகவில்லை. அழுதுகொண்டே, சாப்பிடாமல் அப்படியே உறங்கிப்போய் விட்டாள். அவளுக்குத் தெரியாமலேயே கிளியைத் தூக்கிக்கொண்டு போய் தொலைதூரத்தில் புதைத்துவிட்டு வந்தனர். கிளியின் மரணமும் யாழினியின் வருத்தமும் மனதைப் பிசைந்தன.

மறுநாள் காலையில் என்னிடம் வந்தாள். " சித்தப்பா, பெட்டிய அப்பா
மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போயிருக்காரு" என்றாள்.
அண்ணனும் அண்ணியும் அவளை சமாதானப் படுத்தியிருக்க வேண்டும். " பெட்டி திரும்பி வர இன்னும் ஒரு வாரம் ஆகுமாம்" என்றாள். அடுத்த வாரமே அண்ணன் புதிதாய் ஒரு கிளியை வாங்கிக் கொண்டு வந்தான். யாழினி " ஆஸ்பத்திரியில இருந்து பெட்டி வந்துட்டா" என்று சந்தோஷப்பட்டாள். புதுக்கிளி பெட்டியைப் போல் அல்லாது சற்றே பெரிதாய் , இறக்கைகளுடன் இருந்தது. " ஒரு வாரத்தில் பெட்டிக்கு பெரிசா ரெக்க மொளச்சிருச்சு" என்றாள். கிளியைப் பார்த்து , " பெட்டி, யாழக்கா சொல்லு" என்றாள். அது மவுனம் காத்தது.

இப்போதும் ஊருக்குப் பேசும் போதெல்லாம் யாழினி கிளி பற்றிப் பேசுகிறாள்.
" பெட்டி ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டு வந்ததிலிருந்து அவளுக்குப் பேச்சு
மறந்து போச்சு " என்கிறாள்.

1 comment:

  1. Good one da. You've left us with a hope for a sequel. :)
    My friend commented positively about the simpleness in the narrative and that it was very engaging.

    ReplyDelete